சித்தர் குரல்-ஒரு ஆன்மீகத் தேடலின் பயணம்-பகுதி 3

நேர்காணல்: கொல்லிமலை ரகசியங்களும் குருவின் உபதேசமும் (தொடர்ச்சி)

கேள்வி 11: கொல்லிமலைக் காட்டில் உங்கள் உணவுப் பழக்கம் எப்படி இருந்தது? உங்களுக்குப் பசிக்கவில்லையா? பதில்: அங்கே சாதாரண உணவு ஏதுமில்லை. என் குருநாதர் ஒரு ரகசியத்தை எனக்குச் சொன்னார்: “பசு மாடு எப்போதும் தியானத்திலேயே இருப்பதால் தான் அதன் கழிவுக்கு ‘சாணம்’ என்று பெயர்.” அந்தப் பசுவின் சாணத்தையும், ‘சாவாரைக் கண்டதுண்டோ’ என்று போற்றப்படும் ஜீவ மூலிகையான ஆவாரம் பூவையும் சேர்த்து உருண்டைகளாகச் செய்து தன் பையில் வைத்திருப்பார். எனக்குப் பசிக்கும்போது காலை ஒரு உருண்டை, மாலை இரண்டு உருண்டை எனத் தருவார். அதைச் சாப்பிட்டால் பசி, தாகம், தூக்கம் என எதுவுமே அண்டாது. அந்த அருவித் தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு, பல நாட்கள் என்னால் தவம் செய்ய முடிந்தது.

கேள்வி 12: நீங்கள் காலத்தைக் கடந்து தவத்தில் இருந்த அந்த ஒன்பது நாள் அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்? பதில்: ஒரு திங்கட்கிழமை காலை, “சாமி, என்னை சாப்பாட்டு நேரத்திற்கு எழுப்புங்கள்” என்று சொல்லிவிட்டு சித்தாசனத்தில் அமர்ந்தேன். என் குருநாதர் சிரித்துக்கொண்டே சரி என்றார். நான் தியானத்தில் ஆழ்ந்தேன். எனக்கு உணர்வு திரும்பியபோது விழித்துப் பார்த்தால், அது அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை! இடையில் ஒரு வாரம் முடிந்ததே எனக்குத் தெரியவில்லை. உடல் உணர்வே இல்லாத அந்த ஒன்பது நாட்களும் என்னை ஆட்கொண்டு காத்தது என் குருநாதரின் அருள்தான்.

கேள்வி 13: உங்கள் குருநாதர் குருபானந்த யோகியரின் உடல்நிலை மற்றும் யோக சக்திகள் குறித்து நீங்கள் கண்டது என்ன? பதில்: அவர் 140 வயது கடந்த மகா சித்தர். அவர் படுத்திருக்கும்போது நான் கவனித்திருக்கிறேன், அவர் கை கால்கள் உடலிலிருந்து தனித்தனியாகப் பிரிந்து கிடக்கும் (கண்ட யோகம்). அவருக்கு அஷ்டமா சித்திகளும் கைவந்த கலை. எவரையும் அண்டவிடாத அவர், “உனக்கும் எனக்கும் முன்ஜென்மத் தொடர்பு இருக்கிறது, நீ மறுபிறவி எடுத்து வந்திருக்கிறாய்” என்று கூறி என்னை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டார்.

கேள்வி 14: அந்த மூன்றாண்டு காலத்தில் அவர் உங்களுக்குப் போதித்த கலைகள் என்னென்ன? பதில்: அவர் எனக்கு வெறும் ஆன்மீகத்தை மட்டும் சொல்லித்தரவில்லை. அஷ்டமா சித்திகள், ஜோதிட ரகசியங்கள், மாந்திரீகம், பஞ்சபட்சி சாஸ்திரம், மற்றும் மந்திர-யந்திர-தந்திர வித்தைகள் என அனைத்தையும் தனது கண் அசைவின் மூலமாகவே (Teaching through vision/shakti) எனக்குப் புகட்டினார். ஒரு சீடனாக நான் அனைத்தையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

கேள்வி 15: ஜீவ சமாதி மற்றும் இறைநிலை குறித்து அவர் உங்களுக்குக் காட்டிய வழி என்ன? பதில்: இறைவன் நமக்குள்ளே எப்படி இருக்கிறான் என்பதற்கு அவர் ஒரு அழகான பாடலை உதாரணமாகச் சொன்னார்:

“விறகில் தீயினன் பாலில் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே!” விறகுக்குள் நெருப்பும், பாலுக்குள் நெய்யும் மறைந்திருப்பது போல, நமக்குள்ளே இருக்கும் இறைவனை ‘உணர்வு’ எனும் கயிற்றைக் கொண்டு தியானத்தால் கடைந்தால் அவன் வெளிப்படுவான் என்ற மகா ரகசியத்தை எனக்கு உபதேசித்தார். அந்த மூன்றாண்டு காலப் பயணம் என் வாழ்வையே மாற்றி அமைத்தது.

Scroll to Top